
டெல் அவிவ், அக். 1-
துபாயில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நோக்கிச் சென்ற ஃப்ளைதுபாய் FZ1073 விமானத்தில், ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாவை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் விமானத்தை கடத்தி தரையில் மோதச் செய்ய அவர் முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த பயணிகள் காக்பிட்டுக்குள் நுழைந்து, காயமடைந்த கேப்டனை மீட்டதுடன், ஓமன் விமானியை வெளியே இழுத்தனர். இந்த விமானத்தில் 180 பேர் பயணம் செய்தனர். அவர்களில் 27 பேர் குழந்தைகள்; 6 பேர் விமானப் பணியாளர்கள். காக்பிட்டில் இரு விமானிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் விமானம் குலுங்கியது. இதையடுத்து பயணிகள் காக்பிட்டுக்குள் சென்றனர். அப்போது காயமடைந்த ஸ்மித் மச்சா மீட்கப்பட்டார். ஓமன் விமானி பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விமானம் சவுதி அரேபியாவின் தாபுக் விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. பயணிகளில் இருந்த விமானிகள் விமானத்தை இயக்கினர். பின்னர் மாற்று விமானி மூலம் அது டெல் அவிவ் சென்றடைந்தது. ஸ்மித் மச்சா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஓமன் விமானியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவத்தின் பின்னணி குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது. விமானம் டெல் அவிவ் சென்றடைந்தபின், உதவிய பயணிகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சந்தித்தார். அவர்களில் முக்கியமானவர் யனிவ் ஹாயூன். ரத்தக்கறை படிந்த டி-ஷர்ட்டுடன் அவரைச் சந்தித்த ஹாயூனை நெதன்யாகு கட்டியணைத்து, “இதுதான் உண்மையான கவுரவம். நீங்கள் தான் ஹீரோ” என்றார்.















