
டெல் அவிவ், செப். 30-
துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு 180 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற ஃப்ளைதுபாய் போயிங் 737 மேக்ஸ் ரக பயணிகள் விமானத்தில் நடுவானில் ஒரு பரபரப்பான ஆபத்து ஏற்பட்டது.
விமானம் 34,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, அதன் ஓமன் நாட்டைச் சேர்ந்த இணை விமானி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதன்மை தலைமை விமானியைக் கத்தியால் சரமாரியாகக் குத்தினார். பின்னர் விமானத்தைக் கீழே மோதி விபத்துக்குள்ளாக்கி, அதில் பயணித்த இஸ்ரேலியர்களைக் கொல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.
விமானி அறை உள்ளேயிருந்து பெரும் அலறல் சத்தம் கேட்டதுடன், அடுத்த 2 நிமிடங்களில் விமானம் 17,000 அடிக்கும் கீழே அதிவேகமாகச் சரிந்தது. இதனால் பயணிகள் அனைவரும் தங்களது உயிர் போகப்போகிறது என்று அலறியடித்தனர். விமானத்தில் இருந்து உடனே ஆபத்து குறியீடுகள் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்பட்டன.
விமானி அறை உள்ளே ரத்தம் சிந்தியிருந்ததைக் கண்ட பயணிகள் மற்றும் அதே விமானத்தில் சாதாரண உடையில் பயணித்த நிவாரண விமானி ஆகியோர் உடனடியாகச் செயல்பட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அவர்கள் தாக்குதல் நடத்திய ஓமன் இணை விமானியை மடக்கிப் பிடித்து கயிறுகளால் கட்டிப்போட்டனர். படுகாயமடைந்த இந்திய தலைமை விமானிக்கும் முதலுதவி அளிக்கப்பட்டது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மாற்று விமானிகள் கட்டுப்பாட்டை ஏற்று, விமானத்தை உடனடியாக சவூதி அரேபியாவில் உள்ள தபுக் விமான நிலையத்தில் பாதுகாப்பாக அவசரமாகத் தரையிறக்கினர். படுகாயமடைந்த இரு விமானிகளும் சவூதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பயணிகள் அனைவரும் எவ்வித காயமுமின்றி பாதுகாப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து இஸ்ரேலிய போர் விமானங்கள் நடுவானில் விரைந்து கண்காணிப்பில் ஈடுபட்டன. இது ஒரு திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதலா அல்லது விமானத்தைக் கடத்தும் முயற்சியா என்ற கோணத்தில் இஸ்ரேலின் உளவு அமைப்புகள், சவூதி மற்றும் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுடன் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.















