Home செய்திகள் தேசிய செய்திகள் டெல்லி போராட்டத்தில் காயமடைந்த மாணவர் பிரதிநிதிகளைச் சந்தித்த ராகுல்

டெல்லி போராட்டத்தில் காயமடைந்த மாணவர் பிரதிநிதிகளைச் சந்தித்த ராகுல்

புதுடெல்லி, அக். 15-
டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின்போது காயமடைந்த இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் (என்.எஸ்.யு.ஐ.) பிரதிநிதிகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது, ‘‘வெறுப்புக்கு அன்பால் பதிலளிப்போம்’’ என்று மாணவர்களுடன் இணைந்து அவர் சூளுரைத்தார். செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறியதாவது:
டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் கேரள மாணவி ஆதிராவை அறிமுகப்படுத்த விரும்புகிறேன். போராட்டத்தின்போது அவர் தாக்கப்பட்டபோதும் பயப்படவில்லை. அவரது இதயத்தில் எந்த வெறுப்பும் இல்லை. ஆதிரா ஒரு காதில் கேட்கும் திறனை இழந்துவிட்டார். கடந்த முறை கண் பார்வையை இழந்த ஒரு இளைஞரை உங்களுக்குக் காட்டினேன். இப்போது இந்த மாணவி ஒரு காதில் கேட்கும் திறனை இழந்துள்ளதை வேதனையுடன் தெரிவிக்கிறேன். நம்மீது வெறுப்பைக் காட்டியவர்களுக்கு நாம் அன்பால் பதிலளிப்போம்.அமைதியான முறையில் போராட்டம் நடத்தியபோது தேசியக் கொடியை ஏந்தியதற்காக கைது செய்யப்பட்ட சிஜேபி தலைவர்களான சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோருக்கு 5 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
இது கடும் கண்டனத்துக்குரியது. தேசியக் கொடியை ஏந்துவது குற்றமல்ல என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். இதனிடையே, போராட்டம் நடத்துவதற்கான இடமாக இருந்த ஜந்தர் மந்தரில் இருந்து சமீபத்தில் போராட்டக்காரர்கள் அகற்றப்பட்டனர். இந்நிலையில், அந்தப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து அமைதியைக் குலைத்ததாகக் கூறி தாஸ், ரங்கா இருவரும் கைது செய்யப்பட்டனர். நேற்று காலை அவர்கள் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் ராஜினாமாவை வலியுறுத்தி முழக்கமிட்டபடி, தடுப்புகளைத் தாண்டி அனுமதிக்கப்படாத பகுதிக்குள் நுழைந்ததாகவும், அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் கூறி, இருவர் மீதும் காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.