
புதுடெல்லி, அக். 21-
தீபாவளி பண்டிகை வரை எந்தப் போராட்டங்களையும் நடத்தும் திட்டம் இல்லை என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிறுவனர் அபிஜித் திப்கே தெரிவித்துள்ளார்.
அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட்டு, பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணியில் (எஸ்ஐஆர்) முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, சிஜேபியும் எதிர்க்கட்சியினரும் டெல்லியில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: டெல்லியில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற சம்பவங்களால் கட்சித் தொண்டர்களின் குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர். குறிப்பாக, தனது பெற்றோரும், சிஜேபி நிர்வாகிகளான சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோரின் பெற்றோரும் கவலையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, தீபாவளி வரை எந்தப் போராட்டங்களிலும் ஈடுபடும் திட்டம் இல்லை.
எனவே, சில நாட்களுக்கு தங்களது அன்புக்குரியவர்களுடன் நேரத்தைச் செலவிட வேண்டும் என்றும், குடும்பத்தினருடன் இணைந்து பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்றும் அபிஜித் திப்கே தெரிவித்துள்ளார்.
மேலும், சிஜேபி நிர்வாகிகளை சிறையில் அடைத்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் பயன்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கிடையே, டெல்லியில் உள்ள மந்திர் மார்க் காவல் நிலையத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட சிறப்பு நிர்வாக மாஜிஸ்திரேட் முன்னிலையில், நேற்று முன்தினம் சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களின் நீதிமன்றக் காவல் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.













