
கொல்கத்தா, அக். 19-
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் சோரபாகன் பகுதியில் நவராத்திரியையொட்டி அமைக்கப்பட்டிருந்த துர்கா பூஜை பந்தலில் நேற்று முன்தினம் இரவு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 13 பெண்கள், 2 சிறுவர்கள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் கூறியதாவது: பந்தலுக்கு வெளியே மக்கள் காத்திருந்த நிலையில், அப்போது கனமழை பெய்தது. மழையிலிருந்து தப்பிக்க, வெளியில் காத்திருந்தவர்கள் ஒரே நேரத்தில் பந்தலுக்குள் நுழைய முயன்றனர். அதே நேரத்தில், பந்தலுக்குள் இருந்தவர்களும் அங்கேயே தொடர்ந்து தங்க முயன்றனர்.இந்தச் சூழலில், “பந்தல் சரிந்து விழப்போகிறது; உடனே வெளியேறுங்கள்” என்று ஒலிபெருக்கி மூலம் அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இதனால் பந்தலுக்குள் இருந்த மக்கள் பீதியடைந்து அவசரமாக வெளியேற முயன்றனர். மறுபுறம், வெளியில் இருந்த ஒரு பிரிவினர் பந்தலுக்குள் செல்ல முயன்றதால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் விளைவாக கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். “பந்தல் சரிந்து விழப்போகிறது” என்று ஒலிபெருக்கியில் அறிவித்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றும் போலீஸார் கூறினர். அந்த அறிவிப்பு எவ்வாறு வெளியிடப்பட்டது, அதன் பின்னணியில் இருந்தவர் யார் என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக சோரபாகன் துர்கா பூஜை கமிட்டியின் செயலாளர், துணைத் தலைவர், பந்தல் வடிவமைப்பாளர் உள்ளிட்ட 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 7 பேரும் 10 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.













