
சென்னை, அக். 5- முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் துவரம் பருப்பை முந்தைய ஆட்சியைவிட குறைந்த விலையில் கொள்முதல் செய்து, மூன்று மாதங்களில் ரூ.187.56 கோடியை மிச்சப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், முந்தைய திமுக ஆட்சியில் அதிக விலை கொடுத்து பருப்பு வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழக ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு, கிலோ ரூ.30 என்ற மானிய விலையில் வழங்கப்படுகிறது. தவெக அரசு அமைந்த பிறகு நடத்தப்பட்ட வெளிப்படையான டெண்டர் நடைமுறைகள் மூலம், ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.77.89 விலையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. முந்தைய திமுக ஆட்சியில் ஒரு கிலோவுக்கு ரூ.109.15 செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதனுடன் ஒப்பிடும்போது, தற்போதைய கொள்முதல் விலையில் கிலோவுக்கு ரூ.31 மிச்சம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த மூன்று மாதங்களில் மாநில அரசுக்கு ரூ.187.56 கோடி சேமிப்பு கிடைத்துள்ளது.இந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் 60,000 டன் துவரம் பருப்பை கொள்முதல் செய்ய தவெக அரசு ரூ.467.34 கோடி செலவிட்டுள்ளது. அதே அளவு மற்றும் தரம் கொண்ட பருப்பை 2025-ம் ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரை கொள்முதல் செய்ய திமுக அரசு ரூ.654.9 கோடி செலவிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பருப்பு விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லாத நிலையில், இந்த அளவுக்கு அரசு பணம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது” என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், தற்போதைய அரசு நிர்ணயித்துள்ள கொள்முதல் விலை நீடித்தால், துவரம் பருப்பு கொள்முதலில் மட்டும் ஆண்டுக்கு சுமார் ரூ.750 கோடி வரை மக்கள் பணம் மிச்சமாகும் என்றும் அவர்கள் கூறினர். இந்தக் கணக்கீடுகள், முந்தைய திமுக ஆட்சியில் அதிக விலையில் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டுகின்றன.













