
புதுடில்லி, செப். 21- நாட்டில் அதிக மழைப்பொழிவை வழங்கும் தென்மேற்கு பருவமழை, ராஜஸ்தானின் மேற்கு பகுதிகளில் இருந்து விலகத் தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக செப். 17-ல் விலகத் தொடங்கும் பருவமழை, நடப்பாண்டில் சற்று தாமதமாக நேற்று விலகத் தொடங்கியுள்ளது. தென்மேற்கு பருவமழை, கடந்த ஜூன் 4-ல் கேரளாவில் தொடங்கியது. ஜூலை 9-ல் நாடு முழுவதும் பரவலாக மழை பெய்தது. தற்போது ராஜஸ்தானின் ராம்கர், மோகன்கர், பலோடி, கஜூவாலா ஆகிய பகுதிகள் வழியாக பருவமழை விலகத் தொடங்கியுள்ளது. அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் பஞ்சாப், குஜராத் பகுதிகளில் இருந்தும் பருவமழை விலகும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்பின், ஹரியானா, டில்லி, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் படிப்படியாக பருவமழை விலகி, வறண்ட வானிலை நிலவும். ‘எல் நினோ’ தீவிரமடைந்து வருவதால், நேற்று முன்தினம் நிலவரப்படி நாட்டின் ஒட்டுமொத்த மழைப்பொழிவு சராசரியை விட 15 சதவீதம் குறைந்து, 69.5 செ.மீ. மட்டுமே பதிவாகியுள்ளது. ஜூன், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பெரும்பாலான பகுதிகளில் மழைப்பொழிவு இயல்பை விட குறைவாக இருந்தது. நாட்டின் 43 சதவீத பகுதிகள் மழைப்பற்றாக்குறையை சந்தித்துள்ளன.














