Home செய்திகள் தேசிய செய்திகள் தேசிய மாநாட்டு கட்சி எம்.பி. ரூஹுல்லா விலகல்

தேசிய மாநாட்டு கட்சி எம்.பி. ரூஹுல்லா விலகல்

ஸ்ரீநகர்: நவ.4-
ஜம்மு-காஷ்மீரில் ஆளும் தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆகா சையத் ரூஹுல்லா மெஹ்தி, அக்கட்சியில் இருந்து விலகுவதாகவும், மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் அறிவித்துள்ளார். அவரது இந்த முடிவு, முதல்வர் உமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி ஆட்சிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
கட்சியில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் முக்கிய முகமாக அறியப்படும் ரூஹுல்லா, 2024 மக்களவைத் தேர்தலில் ஸ்ரீநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது அவர் கட்சியில் இருந்து விலகி, எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்வதாக அறிவித்திருப்பதால், ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் நிலை உருவாகியுள்ளது.
இதுதொடர்பாக, தனது ராஜினாமா கடிதத்துடன் 4 பக்க அறிக்கையையும் தேசிய மாநாட்டு கட்சி தலைமைக்கு ரூஹுல்லா அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 மற்றும் 35-ஏ சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான போராட்டத்தை தேசிய மாநாட்டு கட்சி முன்னெடுக்கும் என தான் நம்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 மற்றும் 35-ஏ சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்பட்டது. இதற்கு எதிரான போராட்டத்துக்கு தேசிய மாநாட்டு கட்சி தலைமை தாங்கும் என்கிற நம்பிக்கையில் இருந்தேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை. தேர்தலுக்குப் பிறகு கட்சி தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. மக்களுக்கு செய்யப்பட்ட இந்த துரோகம் என்னை மிகவும் காயப்படுத்தியது” என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ரூஹுல்லாவின் திடீர் முடிவு, தேசிய மாநாட்டு கட்சியில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளதுடன், முதல்வர் உமர் அப்துல்லா தலைமையிலான ஆட்சிக்கும் அரசியல் பின்னடைவாகக் கருதப்படுகிறது.