
பெங்களூரு: அக். 9-
இந்தியாவில் நக்ஸலைட் அமைப்புகளுக்கு வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நிதி உதவி செய்த குற்றச்சாட்டு தொடர்பாக, அமெரிக்காவைச் சேர்ந்த ‘தி திமோதி இனிஷியேடிவ்’ என்ற கிறிஸ்தவ அமைப்பின் மீது பெங்களூரு கொத்தனூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு, தற்போது சத்தீஸ்கர் மாநிலத்திற்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், கொத்தனூர் போலீசார் கடந்த ஜூன் மாதம் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். எனினும், இதே அமைப்பின் மீது கடந்த மே மாதமே சத்தீஸ்கர் மாநிலத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
வெளிநாட்டில் இருந்து பெறப்பட்ட கோடிக்கணக்கான பணம் சத்தீஸ்கர் வங்கிகளில் எடுக்கப்பட்டு செலவிடப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. ஒரே வழக்கை இரண்டு மாநில போலீசார் விசாரிக்க முடியாது என்பதால், நீதிமன்ற அனுமதியுடன் வழக்கு சத்தீஸ்கருக்கு மாற்றப்பட்டுள்ளது.
முக்கிய குற்றவாளிகள் தலைமறைவான நிலையில், அவர்கள் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதைத் தடுக்க லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. மேலும், குற்றவாளிகள் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்களையும் நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்தது.
அமெரிக்காவின் நிறுவனம் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த 4 பேர் உட்பட மொத்தம் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்டவர்கள்: ஜோனாதன் எஸ். ராஜன் (தொட்டகுப்பி சாலை), மீகா மார்க் (யாதவ லேஅவுட்), அஜித் வர்கீஸ் மதாய் (கொத்தனூர்), வர்கீஸ் சாக்கோ (சத்தீஸ்கர்), பப்லூ குர்மி (அஸ்ஸாம்), சுப்ரீம் ஜாய் (மைசூர்) மற்றும் அமெரிக்க நிறுவனம்.
அமெரிக்க வங்கியின் மூலம் ‘சந்தோஷ் குமார்’ என்ற போலி பெயரில் 1,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு டெபிட் கார்டுகள் இந்தியாவில் விநியோகிக்கப்பட்டுள்ளன.
2025 நவம்பர் முதல் 2026 ஏப்ரல் வரையிலான 6 மாத காலத்தில் மட்டும் ரூ. 92.55 கோடி சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 2024 முதல் 2026 வரை கர்நாடகா, சத்தீஸ்கர், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் ரூ. 44 கோடி வரை கார்டுகள் மூலம் எடுக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரின் தம்தரி மற்றும் பஸ்தார் போன்ற நக்ஸலைட் தீவிரவாதம் நிறைந்த பகுதிகளில் வெளிநாட்டு டெபிட் கார்டுகள் மூலம் ரூ. 6.34 கோடி எடுக்கப்பட்டுள்ளது.
தம்தரி பகுதியில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் இருந்து மட்டும் 3,200 பரிவர்த்தனைகள் மூலம் ரூ. 3.2 கோடி ரொக்கமாக எடுக்கப்பட்டு, வர்கீஸ் சாக்கோ மூலமாக நக்ஸல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
இந்தியாவில் இந்த அமைப்பின் அனைத்துப் பணிகளையும் ஜோனாதன் ராஜன், மீகா மார்க் மற்றும் அஜித் வர்கீஸ் மதாய் ஆகியோர் நிர்வகித்து வந்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.













