
புதுடெல்லி: அக். 30-
டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (என்சிஆர்) பட்டாசு வெடிப்பதால் காற்று மாசுபடுவதாகக் கூறி, பட்டாசு வெடிக்கவும் விற்பனை செய்யவும் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தன. நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், பி.பி. வராலே அமர்வு மனுக்களை விசாரித்தது.
நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் பரமேஷ்வரும், மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணனும், பட்டாசுகளின் நச்சுக் காற்று வளிமண்டலத்தில் 3 மாதங்கள் வரை நீடிக்கும் எனத் தெரிவித்தனர். தசரா பண்டிகைக்குப் பிறகு டெல்லியில் காற்று மாசு அளவு 179-லிருந்து 245 ஆக உயர்ந்ததாகவும், கடந்த ஆண்டு தீபாவளியின்போது 2 நாட்களுக்கு மட்டும் பசுமைப் பட்டாசுகளுக்கு அனுமதி அளித்தபோதும் காற்று மாசு 1000 புள்ளிகளைக் கடந்ததாகவும் கூறினர். எனவே, பட்டாசுகளுக்கு முழுமையான தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜே. சாய் தீபக், சிவகாசி உற்பத்தியாளர்கள் உரிமம் பெற்று, அரசு அனுமதித்த அளவிலேயே ரசாயனங்களைப் பயன்படுத்தி பசுமைப் பட்டாசுகளைத் தயாரிப்பதாகத் தெரிவித்தார். காற்று மாசைத் தடுக்க போலி தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்யலாம் என்றும், ஒட்டுமொத்தமாகத் தடை விதிப்பது சாமானிய மக்களைப் பாதிக்கும் என்றும் கூறினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பட்டாசுகளுக்கு ஒரேயடியாக முழுமையான தடை விதிக்க விரும்பவில்லை எனத் தெரிவித்தனர். தீபாவளி கொண்டாட்டம் மக்களின் மனநிலையுடன் தொடர்புடையது என்பதால், மக்கள் தாமாக முன்வந்து பட்டாசு வெடிப்பதைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்றும், அரசு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினர். கிரிக்கெட் பிரபலம் விராட் கோலி போன்றவர்களை அணுகி, பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் தீபாவளியைக் கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என்றும் தெரிவித்தனர்.
பண்டிகையின் இரு நாட்களிலும் அதிகாரிகள் களத்தில் இறங்கி விதிமீறல்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், டெல்லி மற்றும் என்சிஆர் பகுதியில் பட்டாசு வெடிப்பது குறித்து ஓரிரு நாட்களில் சமநிலையான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, நாடு முழுவதும் பட்டாசுகளுக்குத் தடை கோரி அர்ஜுன் கோபால் தொடர்ந்த வழக்கில், பசுமைப் பட்டாசு தயாரிப்பில் ‘பேரியம்’ பயன்பாடு 45 முதல் 60 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. இதுகுறித்து முடிவெடுக்க அவகாசம் தேவைப்படுவதால், வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கக் கோரியது. இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.













