Home மாவட்டங்கள் சென்னை புதுச்சேரியில் தி.மு.க. மறுசீரமைப்பு

புதுச்சேரியில் தி.மு.க. மறுசீரமைப்பு

புதுச்சேரி: அக். 19-
தமிழ்நாட்டில் தி.மு.க. மறுசீரமைப்புப் பணிகள் முழுவேகத்தில் நடைபெற்று வரும் நிலையில், புதுச்சேரி மாநிலத்திலும் கழக மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்று கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தி.மு.க. பவளவிழாவைக் கடந்து, நூற்றாண்டை நோக்கி முன்னேறும் நிலையில், கழகத்தின் அடுத்தகட்டப் பயணத்தில் வெற்றிகளைப் பெறவும் புத்தெழுச்சியை ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கழக மறுசீரமைப்புக்காக மு.க.ஸ்டாலினால் அமைக்கப்பட்ட குழு பல்வேறு பரிந்துரைகளை கழகத் தலைவரிடம் வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் அந்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் அதே நேரத்தில், புதுச்சேரி மாநிலத்திலும் கழக அமைப்பில் தேவையான சீரமைப்புகளை மேற்கொள்ள தலைமைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதற்காக, புதுச்சேரி மாநிலத்தில் மேற்கொள்ள வேண்டிய கழக மறுசீரமைப்புகள் தொடர்பாக ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்க, தங்கம் தென்னரசு தலைமையிலான மறுசீரமைப்புக்குழு செயல்பட்டு வருகிறது. இந்தக் குழு, புதுச்சேரி மாநிலத்தில் மேற்கொள்ள வேண்டிய கழக சீரமைப்புகள் குறித்த தனது பரிந்துரைகளை நவம்பர் 10-ஆம் தேதிக்குள் கழகத் தலைமைக்கழகத்திடம் வழங்கும் என்று தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் கழகத்துக்கு புத்தெழுச்சியை ஏற்படுத்தும் நோக்கில் இந்த மறுசீரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.