Home விளையாட்டு பும்ராவை விட சிராஜே அச்சுறுத்தல்: டிம் சவுதி

பும்ராவை விட சிராஜே அச்சுறுத்தல்: டிம் சவுதி

கிறைஸ்ட்சர்ச், அக். 19- நியூசிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில், டெஸ்ட் அரங்கில் பும்ராவின் தாக்கம் குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி கருத்து தெரிவித்துள்ளார். சோனி ஸ்போர்ட்ஸ் கலந்துரையாடலில் பேசிய சவுதி, நியூசிலாந்து பேட்டர்கள் பும்ராவின் பந்துவீச்சை மிகத் துல்லியமாகக் கணித்து ஆடியுள்ளதாகக் கூறினார். “டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ராவின் பந்துவீச்சை நியூசிலாந்து பேட்டர்கள் நன்றாகக் கணித்து விளையாடியுள்ளனர். பும்ரா ஆடிய எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்தை இந்திய அணி வென்றதே கிடையாது” என்று அவர் தெரிவித்தார். புள்ளிவிவரங்களின்படி, நியூசிலாந்துக்கு எதிராக பும்ரா விளையாடிய 5 டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா தோல்வியடைந்துள்ளது. அந்தப் போட்டிகளில் அவர் 9 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். மேலும், இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து விளையாடிய கடைசி 8 டெஸ்ட் போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. நியூசிலாந்து மண்ணில் பும்ராவைவிட முகமது சிராஜே இந்திய அணிக்கு மிகப்பெரிய ஆயுதமாக இருப்பார் என்றும் சவுதி கணித்துள்ளார். “நான் சிராஜின் பந்துவீச்சுக்கு தீவிர ரசிகன். நாள் முழுவதும் அயராது ஓடிவந்து ஆக்ரோஷமாகப் பந்துவீசும் குணம் அவரிடம் உள்ளது. நியூசிலாந்தின் பச்சைப் புல் ஆடுகளங்களில் சரியான லென்த்தில் பந்தை ஸ்விங் செய்தால், அவர் நியூசிலாந்து பேட்டர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பார்” என அவர் கூறினார். இந்திய அணியின் நீண்ட நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் மொத்தம் 12 போட்டிகள் நடைபெறுகின்றன. அக்டோபர் 22 முதல் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரும், நவம்பர் 4 முதல் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் நடக்கின்றன. தொடர்ந்து, நவம்பர் 19 முதல் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற இந்திய அணிக்கு இந்தத் தொடர் முக்கியமானதாக அமையவுள்ளது.