
பெங்களூரு, செப். 29-
பெங்களூரு நகரின் பல பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும் காவிரி நீர் குடிப்பதற்கு உகந்ததல்ல என்று கர்நாடக மாநில மாசுக்கட்டுப்பாட்டு அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த நீரை விவசாயத்துக்கும், தொழிற்சாலைகளில் குளிரூட்டும் பயன்பாட்டுக்கும் மட்டுமே பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த நீரை பொதுமக்கள் குடித்து வருவதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் பிறந்து தமிழகத்தில் பாயும் காவிரி ஆறு, இரு மாநிலங்களுக்கும் முக்கிய நீராதாரமாக உள்ளது. குடிநீர் மற்றும் விவசாயப் பயன்பாட்டுக்காக இந்த ஆற்று நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்கு காவிரி முக்கிய ஆதாரமாக உள்ளது. இந்நிலையில், காவிரி ஆறு சமீப ஆண்டுகளில் அதிகளவில் மாசடைந்து வருவதாக கூறப்படுகிறது. பெங்களூரு நகரின் சாக்கடை கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலப்பதே இதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட தண்ணீர் தர ஆய்வின் அடிப்படையில், பெங்களூருவின் சர்ஜாபுரா மற்றும் மகாதேவபுரா பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும் காவிரி நீர் ‘இ’ வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் வகைப்பாட்டின்படி, ‘இ’ வகை நீர் குடிப்பதற்கு உகந்ததல்ல. விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளில் குளிரூட்டும் பயன்பாட்டுக்கு மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும். அதேபோல், சாம்ராஜ்நகர், மண்டியா, ராமநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும் காவிரி நீர் ‘சி’ வகையில் உள்ளது. இந்த வகை நீரை சுத்திகரித்து, கிருமி நீக்கம் செய்த பின்னர் குடிநீராகப் பயன்படுத்தலாம். கர்நாடகத்தில் பிறந்து தமிழகத்தின் வழியாகக் கடலில் கலக்கும் தென்பெண்ணையாறும் மாசடைந்து வருவதாகவும், அது ‘இ’ வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு வரும் காவிரி, தென்பெண்ணையாறு நீர் சுத்தமானதாக இல்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.













