
சென்னை, அக். 7-
சென்னையில் பைக் ரேஸ் மற்றும் ஆபத்தான சாகசங்களைத் தடுக்க போக்குவரத்து போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தனிப்படை போலீஸார் சாதாரண உடையில் முக்கிய சாலைகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் அண்ணாசாலை, கிழக்கு கடற்கரை சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் இளைஞர்கள் பைக் ரேஸ் நடத்துவதும், ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவதும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நள்ளிரவு நேரங்களில் சிலர் அதிவேகமாக பைக்குகளை ஓட்டிச் செல்வதாகவும், வீலிங் உள்ளிட்ட சாகசங்களில் ஈடுபடுவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 4-ம் தேதி நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், அண்ணாசாலை, சர்தார் பட்டேல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சில இளைஞர்கள் அதிவேகமாக பைக்குகளை ஓட்டி, ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் 16 பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 11 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், பைக் ரேஸ் மற்றும் சாகசங்களில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ளவர்களையும் போலீஸார் தேடி வருகின்றனர். பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும் சாகசங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போக்குவரத்துக் காவல் கூடுதல் ஆணையர் சாமுண்டீஸ்வரி எச்சரித்துள்ளார். பைக் ரேஸில் ஈடுபடுபவர்களைக் கைது செய்வதுடன், பயன்படுத்தப்படும் பைக்குகளைப் பறிமுதல் செய்யவும் தனிப்படைகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.














