
ஹைதராபாத், அக். 19- ஹைதராபாத்தில் போலீஸார் போல வேடமிட்டு நகை வியாபாரியைக் கடத்திச் சென்று, அவரிடமிருந்து ரூ.1.3 கோடியைப் பறித்ததாகக் கூறப்படும் 10 பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து செகந்தராபாத் மண்டல துணை ஆணையர் ரக்சிதா கிருஷ்ணா மூர்த்தி கூறியதாவது:
கடந்த 5-ம் தேதி, ஹைதராபாத் ராமந்தாபூர் பகுதியில் உள்ள தனது நகைக் கடைக்குச் சென்று கொண்டிருந்த ஸ்ரீனிவாச ராவ் (53) என்ற நகை வியாபாரியை, போலீஸார் போல வேடமிட்டு வந்த மர்ம கும்பல் வழிமறித்துக் கடத்தியது.
அவரை ரகசிய இடத்தில் அடைத்து வைத்த கும்பல், ரூ.15 கோடி தர வேண்டும் என மிரட்டியதுடன், அவரிடம் இருந்த ரூ.1.3 கோடி பணத்தையும் பறித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீஸாரின் சோதனைகளில் சிக்காமல் இருக்க, குற்றவாளிகள் போலி வாகனப் பதிவு எண்களைப் பயன்படுத்தியுள்ளனர். மேலும், தப்பிச் செல்லும் வழியில் கார்களையும் மாற்றிப் பயணித்துள்ளனர். இதையடுத்து தனிப்படை போலீஸார் ஒருங்கிணைந்து விசாரணை நடத்தி, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 10 குற்றவாளிகளைக் கைது செய்தனர். போடுப்பல் மற்றும் ஹேமநகரில் உள்ள ஒரு மனைப் பிரிவு தொடர்பான தகராறே இந்தக் குற்றத்துக்கு முக்கியக் காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்தின் முக்கியக் குற்றவாளியான துமாவத் ஸ்ரீகாந்த், குஞ்சாபோகு சுரேஷ் என்ற சூர்யா அல்லது சூரி, மேலும் ஸ்ரீனிவாஸ் ரெட்டி ஆகியோருடன் இணைந்து கடந்த ஆகஸ்ட் மாதமே கடத்தல் திட்டத்தைத் தீட்டியிருந்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.













