Home மாவட்டங்கள் சென்னை மதுராந்தகம், தாராபுரத்துக்கு ரூ.1,545.5 கோடி திட்டங்கள்

மதுராந்தகம், தாராபுரத்துக்கு ரூ.1,545.5 கோடி திட்டங்கள்

சென்னை, அக். 21-
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்காக மொத்தம் ரூ.1,545.5 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். கடந்த 6-ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில், மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் சத்யபாமாவும் தவெக சார்பில் வெற்றி பெற்றனர். மதுராந்தகம் தொகுதி அச்சிறுபாக்கத்தில் ரூ.20 கோடியில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்படும். அத்திமனம் கிராமத்தில் புக்கத்துறை மடுவின் குறுக்கே ரூ.5 கோடியில் தடுப்பணை கட்டப்படும். செம்பூண்டி ஏரியின் மதகுகள் ரூ.4.50 கோடியில் சீரமைக்கப்படுவதுடன், நெல்வாய் மடுவைத் தூர்வாரி கரைகளைப் பலப்படுத்த ரூ.1.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுராந்தகத்தில் ரூ.1.80 கோடியில் 6 நெல் கொள்முதல் நிலையங்கள், ஆத்தூரில் ரூ.20 கோடியில் 20 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு, ரூ.10 கோடியில் 25 ஏக்கரில் மாநில விதைப்பண்ணை அமைக்கப்படும். மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் ரூ.10 கோடியில் விபத்து மற்றும் அவசரகால சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படும். ஏரியில் சுற்றுலா, பொழுதுபோக்கு அம்சங்களுடன் பூங்கா, நகராட்சியில் பணிபுரியும் பெண்களுக்கான தங்கும் விடுதி, ரூ.3 கோடியில் அறிவுசார் மையம், ரூ.4 கோடியில் வாரச்சந்தை அமைக்கப்படும். கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதுடன், புக்கத்துறை அரசு உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்படும். தாராபுரம் தொகுதியில் 1,232 ஊரகக் குடியிருப்புகளுக்கு காவிரி நீரை ஆதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.1,439 கோடியில் செயல்படுத்தப்படும். வீடற்றவர்களுக்கு 2,700 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும்.