Home மாவட்டங்கள் பெங்களூர் மாலையிலும் குப்பை சேகரிக்கும் திட்டம் – கமிஷனர் கே.என்.ரமேஷ் நேரில் ஆய்வு

மாலையிலும் குப்பை சேகரிக்கும் திட்டம் – கமிஷனர் கே.என்.ரமேஷ் நேரில் ஆய்வு

பெங்களூரு, அக். 21-
பெங்களூரு தெற்கு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பை மேலாண்மையை தீவிரப்படுத்தவும், சாலை யோரங்களில் குப்பைகள் தேங்குவதை தடுக்கும் வகையிலும், மாலையிலும் குப்பை சேகரிக்கும் புதிய முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையர் கே.என்.ரமேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இதுகுறித்து ஆணையர் கே.என்.ரமேஷ் கூறியதாவது:
காலை வேளையில் வேலைக்குச் செல்வோர், பள்ளி-கல்லூரி மாணவர்கள் மற்றும் இல்லத்தரசிகளால் குறித்த நேரத்தில் குப்பைகளை வழங்க முடிவதில்லை. இதனால் சாலை யோரங்களில் குப்பைகள் தேங்கும் சூழல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கும் வகையில், பொம்மனஹள்ளி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மாலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை மக்காத மற்றும் மக்கும் குப்பைகளை சேகரிக்க வாகனங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. 5 வார்டுகளில் அமல்: தற்போது பொம்மனஹள்ளி தொகுதியின் 4 வார்டுகள் உட்பட மொத்தம் 5 வார்டுகளில் இத்திட்டம் சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்டுகளில் காலையில் 160 வாகனங்கள் செல்லும் நிலையில், மாலையில் 20 முதல் 25 ஆட்டோக்கள் மூலம் குப்பை சேகரிக்கப்படுகிறது. குறிப்பாகவார்டில் மாலையில் 6 வாகனங்கள் (3 மக்கும் குப்பை, 3 மக்காத குப்பை) இயக்கப்படுகின்றன. பொதுமக்களின் வசதிக்காக இரவு நேரத்திலும் குப்பை சேகரிக்கும் மாநகராட்சியின் இந்த முயற்சிக்கு அப்பகுதி மக்கள் பெரும் வரவேற்பும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, ஹெச்.எஸ்.ஆர் லேஅவுட் அகரா ஏரி பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால், ஜே.எஸ்.எஸ் பள்ளி எதிரே பயன்படுத்தப்படாமல் உள்ள மேம்பாலத்தின் கீழ் உள்ள இடத்தை வாகன நிறுத்துமிடமாக (பார்க்கிங்) மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது உதவி பொது மேலாளர் நேத்ராவதி, குடியிருப்போா் நலச் சங்க பிரதிநிதி டாக்டர் சாந்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.