Home செய்திகள் தேசிய செய்திகள் ராகுல் செயலுக்கு பா.ஜ. கடும் கண்டனம்

ராகுல் செயலுக்கு பா.ஜ. கடும் கண்டனம்

புதுடில்லி, செப். 21-
மத்தியப் பிரதேசம் இந்தூரில் நடைபெற்ற மாணவர்களின் நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடியையும் அவரது மறைந்த தாயையும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் கிண்டல் செய்ததாகக் கூறி, பா.ஜ. தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தூரில் ‘சத்ரோன் கி கூஞ்ச்’ என்ற மாணவர்களின் குரல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பங்கேற்றார். நகைச்சுவைக் கலைஞர் புல்கித் மணியுடன் இணைந்து, அவர் பலகுரல் நிகழ்ச்சியிலும் நடித்தார். பிரதமர் மோடி உலக நாடுகளின் தலைவர்களுடன் பேசுவது போல இருவரும் நடித்துக் காட்டினர். கூட்டத்தினரைப் பார்த்து கையசைப்பது, பின்னர் சிரிப்பது உள்ளிட்ட பிரதமரின் உடல்மொழியையும் அவர்கள் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. பிரதமரின் மறைந்த தாயை கேலி செய்யும் வகையிலும் நிகழ்ச்சியில் நடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து பேசிய ராகுல், “நீங்கள் சாதாரணமான ஒருவராக உங்கள் நண்பரின் வீட்டுக்குச் செல்லவில்லை. இந்திய பிரதமர் வெறும் நட்பை வளர்க்கும் பணியில் மட்டும் ஈடுபடக் கூடாது. அவர்களுடைய நட்பால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதே உறுதியான கடமை” என்று விமர்சித்தார்.இந்த நிகழ்ச்சியின் காணொலி சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, பா.ஜ. மூத்த தலைவர்கள் பலரும் ராகுலின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.