
பிரான்ஸ், அக். 19- ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுகளுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரான்சில் விலைவாசி உயர்வு, பொது சேவைகளின் தரம் குறைதல், சமத்துவமின்மை ஆகியவற்றைக் கண்டித்து லட்சக்கணக்கானோர் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் போராட்டம் வன்முறையாக மாறியது. லிமோஜஸ் நகரில் 140 ஆண்டுகள் பழமையான டவுன் ஹால் கட்டடத்துக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். வங்கிகள், கடைகள் சேதப்படுத்தப்பட்டதுடன், கார்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இந்த வன்முறைச் சம்பவங்களில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். போராட்டங்களில் அத்துமீறியதாக 1,800-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் எச்சரித்துள்ளார். நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையில் கூறியதாவது: “நாம் அனைவரும் கோபத்தையும் அவமானத்தையும் உணர்கிறோம். நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதியாகப் போராடும் மக்களையும், பொதுச் சொத்துகளை அடித்து நொறுக்கி சூறையாடும் வன்முறையாளர்களையும் தனித்தனியாகப் பார்க்க வேண்டும். கட்டுக்கடங்காத வன்முறைக்கு எந்தக் காரணமும் நியாயமாக இருக்க முடியாது. “வன்முறைகளுக்குப் பின்னால் தீவிர இடதுசாரி குழுக்களும் குற்றவாளிகளும் உள்ளனர். கடைகள் மற்றும் பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தியவர்களிடம் இருந்து இழப்பீடு வசூலிக்கப்படும். அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும். “நாட்டின் இளைஞர்கள் தங்களின் எதிர்காலம், வேலைவாய்ப்பு குறித்து ஆழ்ந்த கவலையில் இருப்பதை உணர்கிறேன். அரசு, கல்வி அமைச்சகத்துடன் இணைந்து அவர்களின் தேவைகளை கவனிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. வன்முறையால் பாதிக்கப்பட்ட வணிகர்கள் மற்றும் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்ய, பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு தலைமையில் அவசர நெருக்கடிக் குழு செயல்படும்” என்றார்.
















