
சென்னை, அக். 19-
சென்னையில் சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழைக்குப் பிறகு, தென்சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே மழைநீர் வடிந்தது. ஆனால், வடசென்னையின் வியாசர்பாடி ஸ்டீபன்சன் சாலை மற்றும் கணேசபுரம் சுரங்கப்பாதை பகுதிகள் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஸ்டீபன்சன் சாலையில் முழங்கால் அளவுக்கு மேல் கழிவுநீரும் மழைநீரும் தேங்கி, துர்நாற்றம் வீசியது. வாகனங்கள் செல்ல முடியாத நிலையில், வியாசர் நகர் காலனி மக்கள் தேங்கிய நீரில் நடந்து சென்றனர்.இதுகுறித்து வியாசர் நகர் காலனியைச் சேர்ந்த ஆர். சேகர் கூறுகையில், “ஸ்டீபன்சன் சாலையில் தண்ணீர் தேங்குவது கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது. ஒவ்வொரு மழைக்காலத்திலும் கணேசபுரம் சுரங்கப்பாதை முழுமையாக மூழ்குகிறது. மழைநீர் வடிகால் அமைப்பதாகவும், ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றுவதாகவும் கூறினார்கள். ஆனால், இப்போதும் பழைய முறையிலேயே தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நிரந்தரத் தீர்வு எப்போது கிடைக்கும்?” எனக் கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவரும், தவெக வடசென்னை மாவட்டச் செயலாளருமானவர் அப்பகுதியில் ஆய்வு செய்தார். பிபி சாலை முதல் கணேசபுரம் சுரங்கப்பாதை வரை தேங்கும் நீரை நிரந்தரமாக வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ஸ்டீபன்சன் சாலையிலிருந்து ஜிஎன்டி சாலைக்கு அடியில் உள்ள குட்ஸ் ஷெட் குளம் வரை 8 அடி உயரம், 4 அடி அகலம் கொண்ட ‘பாக்ஸ் ட்ரெய்ன்’ அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதில் 15 மீட்டர் இணைப்புப் பணி மட்டுமே மீதமுள்ளதாகவும், அது முடிந்தால் தண்ணீர் தேங்காது என்றும் தெரிவித்தார்.ரயில்வே நிலத்தில் உள்ள குட்ஸ் ஷெட் குளம் 3 ஏக்கரில் இருந்து 10 ஏக்கராக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.













