
டாக்கா, அக். 4-
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை அந்நாட்டுக்கு நாடு கடத்துவது தொடர்பாக இந்தியா காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என்று வங்கதேசத்துக்கான இந்திய தூதர் தினேஷ் திரிவேதி தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து,
பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் தங்கியுள்ள அவரை தங்கள் நாட்டிடம் ஒப்படைக்குமாறு வங்கதேச அரசு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.
எனினும், இதுதொடர்பாக இந்தியா இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை. டாக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தினேஷ் திரிவேதி கூறியதாவது: இந்தியாவில் இருந்து ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்ற வங்கதேச அரசின் கோரிக்கை, ஏற்கெனவே உள்ள சட்டபூர்வ நடைமுறைகளின்படி பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதை இந்தியா பலமுறை தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் இருந்து இந்திய விமானப்படை அல்லது ராணுவம் மூலம் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு அழைத்து வரப்படவில்லை.
வங்கதேச விமானப்படை ஹெலிகாப்டர் மூலமாகவே அவர் இந்தியா வந்தார். அந்த நேரத்தில் அவர் வங்கதேசத்தின் பிரதமராக இருந்தார். அவருக்கு அடைக்கலம் அளிப்பதைத் தவிர, அப்போது இந்தியாவுக்கு வேறு வழியில்லை. வங்கதேசத்தின் அண்டை நாடாக, அங்கு நிலவிய யதார்த்த நிலையை ஏற்றுக்கொள்வது இந்தியாவின் கடமை. ஹசீனாவுக்கு அடைக்கலம் அளிக்கமாட்டோம், ஹெலிகாப்டரைத் தரையிறங்க அனுமதிக்கமாட்டோம் என்று இந்தியா தெரிவித்திருந்தால் நிலைமை என்ன ஆகியிருக்கும் என்பது தெரியாது. வங்கதேசத்தில் ஏற்பட்ட துயரமான சூழ்நிலைகளால் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்து, அவர் இந்தியாவில் அடைக்கலம் தேடும் நிலை உருவானது.















