Home செய்திகள் தேசிய செய்திகள் ஹனிடிராப் மூலம் பாகிஸ்தான் உளவாளியான லாரி ஓட்டுநர் கைது

ஹனிடிராப் மூலம் பாகிஸ்தான் உளவாளியான லாரி ஓட்டுநர் கைது

ஸ்ரீநகர், செப். 21- பாகிஸ்தான் பெண் உளவாளியின் ‘ஹனிடிராப்’ வலையில் சிக்கி, அந்நாட்டுக்காக உளவு பார்த்ததாகக் கூறப்படும் காஷ்மீர் லாரி ஓட்டுநர் அமனை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தைச் சேர்ந்த அமன் (24), இந்திய ராணுவத்தின் நடமாட்டங்களை வேவு பார்த்ததாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: சமூக வலைதளம் மூலம் அமனுக்கு பாகிஸ்தான் பெண் உளவாளி ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண், அவரை ‘ஹனிடிராப்’ வலையில் சிக்க வைத்து, இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான விவரங்களை பாகிஸ்தான் உளவாளிகளுடன் பகிர்ந்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதையடுத்து, கதுவா பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு வெளியே சிம் கார்டு பொருத்திய அதிநவீன சிசிடிவி கேமராவை அமன் நிறுவியுள்ளார். அந்தக் கேமரா மூலம் இந்திய ராணுவ வாகனங்களின் நடமாட்டம், ராணுவப் பிரிவுகளின் இடமாற்றம் மற்றும் ஆயுதத் தளவாடங்களின் போக்குவரத்து ஆகியவற்றை பாகிஸ்தான் உளவாளிகள் தங்களது இருப்பிடத்தில் இருந்தபடியே நேரலையாகக் கண்காணித்து வந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பாதுகாப்புப் படையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். அமனின் வீட்டில் நிறுவப்பட்டிருந்த அதிநவீன சிசிடிவி கேமரா மற்றும் டிஜிட்டல் சாதனங்களை அவர்கள் பறிமுதல் செய்தனர். இந்தியாவின் அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தின் கீழ் அமன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.