
அமராவதி, அக். 19-
ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, 2023-ல் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் சட்டத் திருத்தத்தை தனது கட்சி ஆதரித்தது தவறு என்று ஒப்புக்கொண்டார்.ஆந்திராவில் 2019 முதல் 2024 வரை முதல்-மந்திரியாக இருந்த ஜெகன் மோகன் ரெட்டி, பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நேரடியாக இடம்பெறவில்லை. இருப்பினும், பாஜகவுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காமல், நாடாளுமன்றத்தில் அந்தக் கட்சி கொண்டு வந்த பல மசோதாக்களுக்கு ஆதரவு அளித்தார். 2023-ல் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தின்படி, பிரதமர், மத்திய அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய குழு தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது. இதில் ஆளும் தரப்பைச் சேர்ந்த இருவர் இருப்பதால், எதிர்க்கட்சியின் கருத்து புறக்கணிக்கப்படும் நிலை ஏற்படும் என்று விமர்சனங்கள் எழுந்தன. இந்தச் சட்டத்தை ஆதரித்தது தங்கள் கட்சி செய்த தவறு என்று கூறிய ஜெகன் மோகன் ரெட்டி, தேர்தல் ஆணையர்களைத் தேர்வு செய்யும் முறையில் சீர்திருத்தம் தேவை என்றார். தேர்தலை நடத்தும் அதிகாரிகளை நியமிப்பதில் ஆளும் தரப்புக்கு மட்டும் அதிகாரம் இருக்கக்கூடாது என்றும், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் இடம்பெற்றிருந்த முந்தைய தேர்வுக் குழுவை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.













