
சென்னை, அக். 19-
தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 34 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையையடுத்து விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் பின்னர் வாபஸ் பெறப்பட்டது. மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, வடமேற்கு வங்கக்கடல் முதல் தமிழகக் கடலோரம் வரை சுமார் 1.5 கி.மீ. உயரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதனால் இன்று சென்னை, திருச்சி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும். நாளை (20-ம் தேதி) தேனி, திருநெல்வேலி, மதுரை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், பல மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும். சென்னையில் இன்று மேகமூட்டத்துடன் காணப்படும் வானிலையில், சில இடங்களில் கனமழையும் இடையிடையே மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் சென்னை பாரிமுனையில் 36 செ.மீ., கத்திவாக்கத்தில் 34 செ.மீ., சென்ட்ரலில் 27 செ.மீ. மழை பதிவானது. கனமழையால் சென்னைக்கு வந்த 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக தரையிறங்கின; கொல்கத்தாவில் இருந்து வந்த இண்டிகோ விமானம் ஹைதராபாத்துக்கு திருப்பிவிடப்பட்டது. பொதுமக்கள் தேங்கிய நீருக்கு அருகில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.













