Home செய்திகள் தேசிய செய்திகள் போலீஸ் அதிகாரியை சுட்ட நபர் என்கவுன்டரில் பலி

போலீஸ் அதிகாரியை சுட்ட நபர் என்கவுன்டரில் பலி

சண்டிகர், செப். 20-
பஞ்சாப் மாநிலத்தில் போலீஸ் அதிகாரியை சுட்டுக்கொன்றதாக கூறப்படும் நபர், போலீசார் நடத்திய என்கவுன்டரில் உயிரிழந்தார். தப்பியோடிய மற்றொரு குற்றவாளியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.பஞ்சாப் மாநிலம் தரண் தாரண் மாவட்டத்தைச் சேர்ந்த ஹர்ஜித் சிங் (50), அம்ரித்சர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். அவர் நேற்று முன்தினம் அதிகாலை அம்ரித்சரின் கேட் ஹகிமா பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது, துப்பாக்கியுடன் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், ஹர்ஜித் சிங்கை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த அவரை சக போலீசார் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பியோடியவர்களைத் தேடி வந்தனர். இந்த நிலையில், ஹர்ஜித் சிங்கை சுட்டுக்கொன்றதாக கூறப்படும் இருவரும் அம்ரித்சரின் மவுசங் பகுதியில் மோட்டார் சைக்கிளில் செல்வதாக போலீசாருக்கு நேற்று இரவு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீசார், மோட்டார் சைக்கிளில் இருந்த இருவரையும் விரட்டிச் சென்றனர். அப்போது, அந்த நபர்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், குற்றவாளிகளில் ஒருவரான தீபக் சிங் உயிரிழந்தார். மற்றொருவர் அங்கிருந்து தப்பியோடினார். தப்பியோடிய நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஹர்ஜித் சிங் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்தும், இந்தச் சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.