
புதுடெல்லி, செப். 21-
நாட்டில் உணவுப் பொருட்களின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், “நீங்கள் கூறிய அந்த நல்ல நாட்கள் எங்கே போயின? உங்கள் வாக்குறுதி என்ன ஆனது?” என்று பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: நாட்டில் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து, நடுத்தர மற்றும் ஏழை மக்களின் முதுகெலும்பை உடைத்துள்ளது. அன்றாடத் தேவைக்கான அத்தியாவசியப் பொருட்களின் விலை உச்சத்தை எட்டியுள்ளதால், சாமானிய மக்களின் வாழ்க்கை துயரமானதாக மாறியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மஞ்சள், மிளகு, கடுகு, கரம் மசாலா உள்ளிட்ட பொருட்களின் விலை 10 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. சிறிய ஏலக்காய் விலை கிலோ ரூ.4,000-லிருந்து ரூ.4,400-ஆகவும், பெரிய ஏலக்காய் விலை ரூ.2,400-லிருந்து ரூ.2,800-ஆகவும் உயர்ந்துள்ளது. சீரகம் கிலோ ரூ.360-லிருந்து ரூ.400-ஆக அதிகரித்துள்ளது. துவரம் பருப்பு விலை கிலோ ரூ.100-லிருந்து ரூ.130-ஆகவும், கடலைப் பருப்பு ரூ.70-லிருந்து ரூ.100-ஆகவும், உளுந்து ரூ.120-லிருந்து ரூ.140-ஆகவும் உயர்ந்துள்ளது. கடுகு எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.190-லிருந்து ரூ.210-ஆக அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்தில் நாடு முழுவதும் வெங்காயத்தின் சராசரி சில்லறை விலை கிலோ ரூ.29.50 ஆக இருந்தது. அது செப்டம்பரில் ரூ.53.78-ஆக உயர்ந்துள்ளது. மூன்றரை மாதங்களிலேயே வெங்காய விலை 82.3 சதவீதம் உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வால் பருப்பு வகைகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஏழைகளுக்கு எட்டாக்கனியாகி வருகின்றன. ஆனால், பிரதமர் இந்த விவகாரத்தில் மவுனம் காக்கிறார். நீங்கள் கூறிய ‘நல்ல நாட்கள்’ எங்கே போயின? அவை வெறும் பேச்சாகவே நின்றுவிட்டனவா என மக்கள் கேட்கின்றனர். கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வுக்கு எதிராக மோடி அரசு உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுத்து, சாமானிய மக்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.














