
திருமலை, செப். 24- திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 8 நாட்களில் ரூ.28.94 கோடி உண்டியல் காணிக்கையாகச் செலுத்தப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் 33 லட்சம் லட்டு பிரசாதங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த 15-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெற்ற பிரம்மோற்சவ விழாவில், 5.67 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர். 21.84 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், 2.04 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். விழா நிறைவடைந்ததையடுத்து, பக்தர்கள் வருகை, காணிக்கை, லட்டு விற்பனை, அன்னதானம் மற்றும் தலைமுடி காணிக்கை தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பிரம்மோற்சவ விழாவில் 20 மாநிலங்களைச் சேர்ந்த 7,871 நடனக் கலைஞர்கள், 295 குழுக்களாகப் பங்கேற்று நடன நிகழ்ச்சிகளை நடத்தினர். இந்த ஆண்டு முதன்முறையாக சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த நடனக் குழுக்களும் விழாவில் பங்கேற்றன. விழா அலங்காரப் பணிகளுக்காக 60 டன் மலர்கள், 4 லட்சம் தனிப்பூக்கள் மற்றும் 80 ஆயிரம் சீசன் மலர்கள் பயன்படுத்தப்பட்டன. பக்தர்களின் பாதுகாப்புப் பணியில் 3,000 போலீஸாரும், 2,400 தேவஸ்தான விஜிலென்ஸ் பாதுகாப்பு ஊழியர்களும் ஈடுபட்டனர். கருட சேவையை முன்னிட்டு கூடுதலாக 1,000 போலீஸார் பாதுகாப்புப் பணிக்கு நியமிக்கப்பட்டனர். மேலும், விழா நாட்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள 3,500 துப்புரவுத் தொழிலாளர்கள் இரவு பகலாகப் பணியாற்றினர். 15-ம் தேதி முதல் 22-ம் தேதி வரையிலான 8 நாட்களில் கிடைத்த மொத்த விவரங்களின்படி, ரூ.28.94 கோடி உண்டியல் காணிக்கையும், 33 லட்சம் லட்டு பிரசாத விற்பனையும் பதிவாகியுள்ளன.













