
புதுடெல்லி, செப். 29-
பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும், பாலியல் வன்கொடுமை புகார்களில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பெண் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். “நாங்கள் ரீல்ஸ் எடுக்க இங்கு வரவில்லை” என்று முழக்கமிட்ட மாணவிகள், அங்கிருந்த விவேகானந்தர் சிலையிலும் ஏறி போராட்டம் நடத்தினர். தெற்கு டெல்லியில் உள்ள ஆஸ்தா குஞ்ச் பூங்காவில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு, பெண்களின் பாதுகாப்பு குறித்து மாணவிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். கடந்த சில வாரங்களாக டெல்லியில் பெண்கள் மற்றும் மைனர் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். கடந்த செப்டம்பர் 23-ம் தேதி லேடி ஸ்ரீராம் கல்லூரி மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில், தற்போது டெல்லி பல்கலைக்கழக மாணவிகளும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இரவு நேரங்களில் பெண்கள் பொது இடங்களுக்குச் செல்ல கட்டுப்பாடுகள் விதிப்பதற்குப் பதிலாக, அந்த இடங்களைப் பாதுகாப்பானதாக மாற்ற வேண்டும் என மாணவிகள் வலியுறுத்தினர். தெருவிளக்குகள் இல்லாத பகுதிகள், பாதுகாப்பற்ற பயணங்கள், குடும்பத்தினரின் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பிரச்சினைகளை அவர்கள் பகிர்ந்துகொண்டனர். “குற்றங்களைச் செய்வது நாங்கள் இல்லை; ஆனால் கட்டுப்பாடுகள் எங்கள் மீதே விதிக்கப்படுகின்றன” என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். கல்வி நிறுவனங்களின் புகார் கமிட்டிகளின் செயல்பாடு குறித்தும் மாணவர் அமைப்பினர் கவலை தெரிவித்தனர். பல்கலைக்கழக நிகழ்ச்சிகள், ஆண்டு விழாக்களின்போது அளிக்கப்படும் பாலியல் தொல்லை புகார்களில் போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர். தெருவிளக்குகள், மேம்பட்ட பொது போக்குவரத்து, பாலியல் புகார்களை கையாள்வதில் பொறுப்புணர்வு ஆகியவற்றை மாணவிகள் கோரினர். பாதிக்கப்பட்டவர்களையே குற்றம்சாட்டும் போக்கையும், பெண்களின் உடை மற்றும் நடத்தைக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதையும் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.













