
புதுடெல்லி, செப். 29-
18 வயது நிரம்பாத மனைவியுடன் பாலியல் உறவு கொள்வது, முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் கீழ் திருமணம் செல்லுபடியாக இருந்தாலும், போக்சோ சட்டப்படி குற்றமே என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டெல்லியில் 16 வயது சிறுமிக்கு 28 வயது இளைஞருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு இருவரும் ஒன்றாக வாழ்ந்த நிலையில், சிறுமி கர்ப்பமானார். கர்ப்ப காலத்தில் அரசு மருத்துவமனைக்குச் சென்றபோது, 18 வயது நிறைவடைவதற்கு முன்பே அவருக்குத் திருமணம் நடைபெற்றதும், அவர் கர்ப்பமானதும் மருத்துவர்களுக்குத் தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், சிறுமியின் கணவர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, பாதிக்கப்பட்ட தம்பதி சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின்போது, பருவமடைந்த முஸ்லிம் பெண் திருமணம் செய்துகொள்ளத் தகுதியானவர் என முஸ்லிம் தனிநபர் சட்டம் கூறுவதாக தம்பதி தரப்பில் வாதிடப்பட்டது. திருமணம் செல்லுபடியாகும் என்பதால், அதற்குப் பிறகான பாலியல் உறவை குற்றமாகக் கருத முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, கடந்த ஜூன் மாதம் சிறுமி இறந்த குழந்தையைப் பெற்றெடுத்தார். அவர் அளித்த வாக்குமூலத்தில், “எனது திருமணம் சொந்த விருப்பத்திலும், இரு குடும்பங்களின் சம்மதத்துடனும் நடைபெற்றது. எந்தக் கட்டாயத்துக்கோ அழுத்தத்துக்கோ நான் ஆளாகவில்லை” என்று கூறியிருந்தார். இந்நிலையில், நீதிபதி சஞ்சீவ் நரூலா கடந்த 23-ம் தேதி வழங்கிய தீர்ப்பில், 18 வயதுக்குட்பட்ட சிறுமி முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் கீழ் மனைவியாக இருந்தாலும், அவருடன் உடல் உறவு கொள்வது எந்தச் சூழலிலும் பாலியல் வன்கொடுமையாகவே கருதப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
திருமணம் செல்லுபடியாகும் என்பதைக் காரணம் காட்டி குற்றவியல் நடவடிக்கையைத் தவிர்க்க முடியாது என்றும், போக்சோ மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் (பிஎன்எஸ்) கீழ் குழந்தைகளுக்கான பாதுகாப்பே முதன்மையானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுமியின் சம்மதம் கூட அந்த உறவைச் சட்டப்பூர்வமாக்காது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.













