
ஸ்ரீநகர்: செப். 29-
ஜம்மு காஷ்மீருக்கு தன்னாட்சி அதிகாரத்துடன் கூடிய மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி, சட்டப்பேரவையில் நேற்று சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
கடந்த 2019-ம் ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது. தொடர்ந்து ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் அமைந்தன.
2024-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய மாநாடு கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல்வர் உமர் அப்துல்லா, ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், 1953-ம் ஆண்டுக்கு முந்தைய அரசியலமைப்பு அந்தஸ்தை ஜம்மு காஷ்மீருக்கு வழங்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. பாதுகாப்பு, வெளிநாட்டுக் கொள்கை, கரன்சி உள்ளிட்ட முக்கிய விவகாரங்களைத் தவிர, பிற அனைத்து துறைகளிலும் காஷ்மீர் அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க அதிகாரம் வழங்க வேண்டும் என்றும், சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35-ஐ மீட்டெடுக்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாநில அந்தஸ்து கோரிக்கைக்கு பாஜக முழு ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால் தன்னாட்சி அதிகாரம் மற்றும் சிறப்பு அந்தஸ்தை மீண்டும் கோருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக எம்எல்ஏக்கள், அவையின் மையப் பகுதியில் கூடி எதிர்ப்புக் குரல் எழுப்பினர். இதையடுத்து, அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் அப்துல் ரஹீம் ரத்தர் உத்தரவிட்டார். நான்கு எம்எல்ஏக்களை அவைக் காவலர்கள் வெளியேற்றிய பின்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் சுனில் சர்மா கூறுகையில், உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளதாகவும், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார். தன்னாட்சி கோரும் தீர்மானம் நாட்டின் நலனுக்கு எதிரானது என்றும் அவர் குற்றம்சாட்டினார். முதல்வர் உமர் அப்துல்லா, “தீவிரவாதம் முழுமையாக ஓய்ந்த பிறகே மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை ஏற்க முடியாது. உடனடியாக மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்” என்றார்.













