Home செய்திகள் தேசிய செய்திகள் டெல்லி பாலியல் வன்கொடுமை: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை

டெல்லி பாலியல் வன்கொடுமை: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை

புதுடெல்லி: செப். 29-
டெல்லியில் சமீப காலமாக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கவனத்தில் கொண்ட உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இதையடுத்து, வழக்கை விசாரணைக்குப் பட்டியலிடுமாறு பதிவாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்கிழக்கு டெல்லியில் உள்ள கல்காஜி மந்திர் அருகே அமைந்துள்ள ஆஸ்தா கஞ்ச் பூங்காவில், செப்டம்பர் 21-ஆம் தேதி 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். காவல் துறையினர் போல் நடித்த மூன்று நபர்கள் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக, நீதிபதிகள் ஜெ.பி. பர்திவாலா, கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு தாமாக முன்வந்து வழக்கைக் கையில் எடுத்தது. வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அதனை உரிய முறையில் பட்டியலிடுமாறும் பதிவாளருக்கு அமர்வு உத்தரவிட்டது.
செப்டம்பர் மாதத்தில் மட்டும் டெல்லியில் 13 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிப்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். டெல்லி மற்றும் தேசியத் தலைநகர் பிராந்தியமான என்.சி.ஆர். பகுதிகளில் இத்தகைய சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். மேலும், அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள், பொதுமக்களின் அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் நிர்வாகமும் அமைப்பும் தோல்வியடைந்திருப்பதைத் தெளிவாகக் காட்டுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இந்தக் கருத்துகளின் அடிப்படையில், வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.