Home தலைப்பு செய்தி எஸ்ஐஆர் ரத்து செய்ய போராட்டம்

எஸ்ஐஆர் ரத்து செய்ய போராட்டம்

புதுடெல்லி: செப். 29-
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் எஸ்.ஐ.ஆர்-ஐ (வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம்) ரத்து செய்யக் கோரியும், முறைகேடு புகார்களுக்கு உள்ளாகியுள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும், காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய போராட்டத்தை தீவிரப்படுத்தும் நோக்கில் கட்சியின் செயற்குழுவில் முக்கிய விவாதம் நடத்தப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான இந்திரா பவனில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் காங்கிரஸ் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எஸ்.ஐ.ஆர் முறைகேடு மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மத்திய தேர்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாக மாறியுள்ளது என்பதை முன்வைத்து நாடு முழுவதும் போராட்டம் நடத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
எஸ்.ஐ.ஆர் முறைகேட்டுக்கு எதிராக ‘இண்டியா’ கூட்டணியின் அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசித்து போராட்ட வடிவங்களை வகுக்க செயற்குழுவில் விவாதிக்கப்பட்டது.
கர்நாடகாவில் கட்சியை வலுப்படுத்த நாளையிலிருந்து தொடங்கவுள்ள ‘பாரத் ஜோடோ-2’ யாத்திரை குறித்தும் செயற்குழுவில் விவாதிக்கப்பட்டது.
நாட்டின் கல்வி முறையில் கொண்டுவரப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தும், தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் மற்றும் தேர்வு முறையை மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இன்றைய செயற்குழுவில் விவாதிக்கப்பட்டது.
இந்தச் செயற்குழுவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மாநில முதலமைச்சர் டி.கே. சிவகுமார், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா உட்பட காங்கிரஸ் கட்சியின் அனைத்து முக்கியத் தலைவர்களும் கலந்துகொண்டனர்.