
அபுதாபி, அக். 4- நடுவானில் துணை விமானியால் கோடரியால் தாக்கப்பட்ட இந்திய வம்சாவளி விமானி ஸ்மித் மச்சார் நன்கு குணமடைந்து வருவதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி ‘ஃபிளை துபாய்’ விமானம் புதன்கிழமை (செப். 30) காலை புறப்பட்டது. விமானத்தில் 174 பயணிகள், 2 விமானிகள் உள்பட 6 ஊழியர்கள் என மொத்தம் 180 பேர் இருந்தனர். 39 வயதான இந்திய வம்சாவளி விமானி ஸ்மித் மச்சார் விமானத்தை இயக்கினார். அவருடன் ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி பணியில் இருந்தார்.
திடீரென விமானி அறையில் இருந்த கோடரியால் ஸ்மித் மச்சாரை துணை விமானி தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயமடைந்த போதிலும், ஸ்மித் மச்சார் அவரை எதிர்த்துப் போராடினார். சரியான நேரத்தில் விமானி அறையைத் திறந்து, சக பயணிகளின் உதவியுடன் விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்கினார். இதன் மூலம் பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது. சவூதி அரேபியாவின் தபூக் நகரில் முதலுதவி சிகிச்சை பெற்ற ஸ்மித் மச்சார், பின்னர் மேல் சிகிச்சைக்காக அபுதாபிக்கு மாற்றப்பட்டார்.
அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர், சிறந்த மருத்துவக் கண்காணிப்பில் நன்கு குணமடைந்து வருவதாக இந்திய தூதரகம் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. அவரது குடும்பத்தினர் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், சிறந்த சிகிச்சை அளித்த ஐக்கிய அரபு அமீரக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தூதரகம் கூறியுள்ளது.
















