
பாரிஸ், அக். 13- பிரான்ஸ் நாட்டில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சூப்பர் மார்க்கெட்டுகளின் ஃபிரிட்ஜ்கள், ஃபிரீஸர்கள் போன்ற குளிர்சாதன இயந்திரங்களை ஹேக் செய்து, அதில் உள்ள உணவுகளை சேதப்படுத்தி, தீ விபத்து ஏற்படுத்தும் சைபர் தாக்குதலை ஹேக்கர்கள் மேற்கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. என்ன நடந்தது? பிரான்ஸில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஃபிரிட்ஜ்களின் கட்டுப்பாட்டை தங்கள் வசப்படுத்திய ஹேக்கர்கள், அதன் வெப்பநிலையை சுமார் 50 டிகிரி செல்சியஸ் வரை உயர்த்தி உள்ளனர். அதன் மூலம் ஃப்ரெஷ் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பண்டங்களை பயன்படுத்த முடியாத வகையில் சேதப்படுத்தி உள்ளனர். தொடர்ந்து அதிக வெப்பநிலையில் இயக்கியதால் இயந்திரம் சூடாகி தீ விபத்து ஏற்பட்டதாகவும் தகவல். இதனால் ஒரே நாளில் தேசம் முழுவதும் சேதமான உணவு பொருட்களின் மொத்த மதிப்பு சில மில்லியன் யூரோக்கள் இருக்கும் என தகவல். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள பிரான்ஸ் தேசிய சைபர் பாதுகாப்பு முகமைக்கு அந்நாட்டு பிரதமர் செபஸ்டியன் உத்தரவிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.















