
ஜெய்ப்பூர், அக். 15-
ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட் நகரிலிருந்து டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம், கடத்தல் எச்சரிக்கை காரணமாக நேற்று காலை ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. ஏர் இந்தியாவின் AI 2030 விமானம் போயிங் 787-9 ரகத்தைச் சேர்ந்தது. அந்த விமானம், கடத்தல் அல்லது சட்டவிரோதச் செயலைக் குறிக்கும் சர்வதேச அவசரக் குறியீடான 7500-ஐ ரேடார் சமிக்ஞைக் கருவி மூலம் ஒளிபரப்பியதாக சிவில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரக வட்டாரங்கள் தெரிவித்தன. விமானத்தின் தலைமை விமானி விடுத்த எச்சரிக்கை, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்துக்குக் கிடைத்ததைத் தொடர்ந்து, விமானம் ஜெய்ப்பூருக்குத் திருப்பிவிடப்பட்டது. விமான நிலையத்தில் தரையிறங்கியதும், அது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, விமான நிலையப் பாதுகாப்பு அமைப்புகள், உள்ளூர் காவல் துறை மற்றும் தீவிரவாத எதிர்ப்புப் படைக் குழுக்கள் இணைந்து விமானம், அதில் இருந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை முழுமையாகப் பரிசோதித்தன. பாதுகாப்புப் படையினரின் மேற்பார்வையில் பயணிகளும் விமானப் பணியாளர்களும் படிப்படியாக விமானத்திலிருந்து இறக்கப்பட்டனர். வெடிகுண்டு மிரட்டல் காரணமாகவே விமானம் தரையிறக்கப்பட்டதாக மால்வியா நகர் உதவி காவல் ஆணையர் ஷிவ் தயாள் தெரிவித்தார். இதனிடையே, டெல்லியில் தேசியப் பாதுகாப்புப் படையினர் தயார்நிலையில் வைக்கப்பட்டனர்.













