Home செய்திகள் தேசிய செய்திகள் பிஜாப்பூரில் சி.ஆர்.பி.எப். உதவி ஆய்வாளர் தற்கொலை

பிஜாப்பூரில் சி.ஆர்.பி.எப். உதவி ஆய்வாளர் தற்கொலை

பிஜாப்பூர், அக். 15-
சத்தீஷ்கார் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் பணியில் இருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சி.ஆர்.பி.எப்.) உதவி ஆய்வாளர் ஒருவர், தனது துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மாவோயிஸ்டுகளின் பாதிப்பில் இருந்து சத்தீஷ்கார் முழுமையாக விடுபட்டு விட்டதாக கடந்த மார்ச் மாதம் மாநில அரசு அறிவித்தது. இருப்பினும், மாவோயிஸ்டுகளை ஒழிக்கும் நடவடிக்கைக்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள மெட்டாகுடம் காட்டுப்பகுதியில் சி.ஆர்.பி.எப். முகாம் செயல்பட்டு வருகிறது. அங்கு 131-வது பட்டாலியனைச் சேர்ந்த தேவானந்த் யாதவ், உதவி ஆய்வாளர் அந்தஸ்தில் பணியாற்றி வந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் அவர் பணியில் இருந்தபோது, தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். துப்பாக்கிக் குண்டு பாய்ந்து படுகாயமடைந்த அவர் கீழே சரிந்து விழுந்தார். துப்பாக்கிச் சத்தம் கேட்டு அங்கு வந்த சக வீரர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக சுக்மா மாவட்டத்தில் உள்ள மற்றொரு முகாமுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி தேவானந்த் யாதவ் உயிரிழந்தார். உத்தரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள கர்ஜஹா கிராமப் பகுதியைச் சேர்ந்த தேவானந்த் யாதவ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சத்தீஷ்காரில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த 8 ஆண்டுகளில் நடைபெற்றுள்ள இதுபோன்ற சம்பவங்களில் இது 200-வது சம்பவமாகும். குடும்பம் மற்றும் தனிப்பட்ட காரணங்கள், மதுவுக்கு அடிமையாதல், சுகாதாரம் தொடர்பான பாதிப்புகள் உள்ளிட்டவை தற்கொலைக்கான காரணங்களாக கூறப்படுகின்றன.