
சென்னை: அக். 19-
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் அமைக்கும் திட்டத்துக்கு மீனவ மக்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், மாற்று இடமாக பல்லவன் இல்ல வளாகத்தை தவெக அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடி செலவில், 20 லட்சம் சதுர அடி கட்டடப் பரப்பளவில் புதிய வளாகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இதற்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்றன. இதையடுத்து பல்லவன் இல்லம் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், இதுவரை இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. புதிய வளாகம் அமையும் இடம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு வாரத்துக்குள் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பல்லவன் இல்ல வளாகத்தில் சுமார் 13.22 ஏக்கர் நிலத்துடன் கட்டடங்கள் உள்ளன. சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் இரண்டு பணிமனைகள் அங்கு செயல்படுகின்றன. “இந்த இடம் புதிய தலைமைச் செயலகத்துக்கு பொருத்தமானது. ஊழியர்கள் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் மூலம் எளிதாகப் பயணிக்க முடியும்” என்று அரசு அதிகாரி ஒருவர் டிடி நெக்ஸ்ட் நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.இந்த நிலம் ஏற்கெனவே அரசுக்குச் சொந்தமானது என்பதால், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் பொதுமக்களை வெளியேற்றுதல் தேவையில்லை என்பது அரசுக்கான முக்கிய சாதகமாகக் கூறப்படுகிறது. அண்ணா சாலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்துக்கு அருகில் இந்த வளாகம் அமைந்துள்ளதால், ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்து வசதியும் எளிதாகும்.பல்லவன் இல்லம் தேர்வு செய்யப்பட்டால், அங்கு செயல்படும் மாநகரப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்துக்கு மாற்று இடம் தேவைப்படும். கோயம்பேட்டில் உள்ள சென்னை புறநகர் பேருந்து நிலையத்தைப் பரிசீலித்து, போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகங்களை அங்கு மாற்றலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர்.பல்லவன் இல்ல வளாகத்தில் எம்டிசி பணிமனை 7.55 ஏக்கர், பழைய எஸ்இடிசி வளாகம் 3.957 ஏக்கர், பல்லவன் இல்லம் 1.701 ஏக்கர் என மொத்தம் 13.208 ஏக்கர் நிலம் உள்ளது.













