
சென்னை, அக். 19-
திருவண்ணாமலை கோவிலில் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், முஸ்லிம் நபர் ஒருவருக்கு மட்டும் கோவிலுக்குள் அனுமதி அளிக்கப்பட்டதாகக் கூறி, ஹிந்து அமைப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர். மதுரையைத் தொடர்ந்து திருவண்ணாமலையிலும் இதுபோன்ற விதிமீறல் நடப்பது, ஏதாவது பெரிய மாற்றத்திற்கான ஒத்திகையா என்றும் அவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். ஹிந்து தமிழர் கட்சித் தலைவர் ராம ரவிக்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலையில் நடைபெற உள்ள கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் ரமேஷ், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் நேற்று முன்தினம் கோவிலில் ஆய்வு செய்தனர். அப்போது செய்தியாளர்களுக்கு கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அதே நேரத்தில், முஸ்லிம் நபர் ஒருவர் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது ஏற்கத்தக்கதல்ல. இதுபோன்ற செயல்பாடுகள் பக்தர்களின் நம்பிக்கையையும், கோவில் நிர்வாகத்தின் நம்பகத்தன்மையையும் பாதிக்கும். எனவே, செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணத்தையும், முஸ்லிம் நபர் எந்த அடிப்படையில் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டார் என்பதையும் இந்து சமய அறநிலையத் துறை தெளிவுபடுத்த வேண்டும் என்று ராம ரவிக்குமார் தெரிவித்துள்ளார். ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ் கூறியதாவது: திருவண்ணாமலை கோவிலில் ஆய்வுக்கு வந்த அமைச்சர்களுடன், மத அடையாளங்களுடன் முஸ்லிம் நபர் ஒருவர் வந்துள்ளார். முதலில் மதுரையிலும், தற்போது திருவண்ணாமலையிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது, ஏதாவது பெரிய மாற்றத்திற்காக அரசு ஒத்திகை பார்க்கிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது. கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில், 2023-ல் முஸ்லிம் பெண் ஒருவர் வந்தபோது பூஜைகள் நிறுத்தப்பட்டு, பிராயச்சித்த பூஜைகள் நடத்தப்பட்டன. அங்கு கோவில் ஆச்சாரம் முக்கியமாகக் கருதப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் அறநிலையத் துறையைப் பொறுத்தவரை அண்ணாமலையார் கோவில் பணம் கொட்டும் இடமாக மட்டுமே கருதப்படுவதாகவும், கோவில் சாநித்யமும் மரபும் பொருட்படுத்தப்படுவதில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.













