
புதுடெல்லி: அக். 30-
பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் 6 இந்திய மாலுமிகள் கடந்த 7 மாதங்களாக சிக்கித் தவித்து வருவதாகவும், அவர்களைப் பாதுகாப்பாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரானைத் தளமாகக் கொண்ட கெவர் ஷிப்பிங் நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பல், கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்துக்குச் சென்றது. கப்பல் நிறுவனத்துக்கும் துறைமுக அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, அந்தக் கப்பல் தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கப்பலில் 6 இந்திய மாலுமிகள் இருந்த நிலையில், அவர்கள் கடந்த 7 மாதங்களாக அங்கேயே தவித்து வருவது தற்போது தெரியவந்துள்ளது.
மாலுமிகளின் பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கப்பலுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டிருப்பதால் அவர்களுடன் தொடர்புகொள்வது மிகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். கராச்சி துறைமுகத்தில் சிக்கியுள்ள இந்திய மாலுமிகளில், உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜைச் சேர்ந்த வணிகக் கப்பற்படை தலைமை அதிகாரி வினீத் கிஷோர் மிஸ்ராவும் ஒருவர்.
மிஸ்ரா உள்பட 6 இந்திய மாலுமிகளையும் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கக் கோரி, அவரது குடும்பத்தினர் பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரகத்துக்குக் கடிதம் எழுதினர். தூதரகம் சார்பில் உறுதிமொழிகள் வழங்கப்பட்டபோதிலும், 7 மாதங்கள் கடந்தும் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் தலையிட்டு 6 இந்தியர்களும் பாதுகாப்பாக நாடு திரும்புவதை உறுதி செய்யுமாறு குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சகத்திடம் மிஸ்ராவின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், பிரச்சினையை மத்திய அரசின் கவனத்துக்கு விரைவாகக் கொண்டு செல்ல, தங்களது உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மூலமாகவும் அவர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.













