
குஜராத், அக். 30-
விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் வகையில், அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பணம் செலுத்தும் ‘பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி’ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ‘பி.எம். கிசான்’ என அழைக்கப்படும் இத்திட்டம், நாடு முழுவதும் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளை இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தத் தொகை, தலா ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இதுவரை 23 தவணைகளாக, மொத்தம் ரூ.4.47 லட்சம் கோடி வங்கிக் கணக்குகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பி.எம். கிசான் திட்டத்தின் 24-வது தவணைத் தொகையை பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் இருந்து விடுவிக்கிறார். நாடு முழுவதும் 9 கோடியே 34 லட்சம் விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 வீதம், மொத்தம் ரூ.18,680 கோடி இந்தத் தவணையாக வழங்கப்பட உள்ளது. குஜராத் மாநிலத்தில் மட்டும் 52.33 லட்சம் விவசாயிகள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைய உள்ளனர். அவர்களுக்காக ரூ.1,051 கோடி நிதி விடுவிக்கப்பட உள்ளது. விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக நிதி செலுத்தும் இத்திட்டத்தின் 24-வது தவணை வெளியீடு, பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியின் மூலம் நடைபெறுகிறது. மேலும், எக்ஸ்பிரஸ் ரயில் சேவை உள்பட இரண்டு ரயில் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். ஆமதாபாத் மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.













