
சென்னை, நவ. 4-
தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் முக்கியமான நாளான நவம்பர் 4-ஐ முன்னிட்டு, சாதிவாரி பிரதிநிதித்துவ இடஒதுக்கீட்டை சாத்தியமாக்கும் போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்துவோம் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு சமூகத்துக்கும் அவர்களின் மக்கள் தொகைக்கு இணையான இடஒதுக்கீடு வழங்குவதுதான் முழுமையான சமூகநீதி. 99 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில், அன்றைய சென்னை மாகாணத்தில் 100 சதவீத வகுப்புவாரி பிரதிநிதித்துவ இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கான மூன்றாவது கம்யூனல் ஜி.ஓ. எனப்படும் அரசாணை எண் 1071 நிறைவேற்றப்பட்டது. அன்றைய முதலமைச்சர் ப.சுப்பராயனும்,
கல்வித்துறை அமைச்சர் கும்பகோணம் முத்தையா முதலியாரும் அதை சாத்தியமாக்கினர்.1935-ல் சென்னை மாகாணத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கும் நீட்டிக்கப்பட்ட 100 சதவீத இடஒதுக்கீடு, 1950-ம் ஆண்டு செண்பகம் துரைராஜன் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை நீடித்தது. அதன் பின்னர், 1951-ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தத்தால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 25 சதவீதமும், பட்டியலினத்தவருக்கு 18 சதவீதமும் என மொத்தம் 41 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது. அது தற்போது 69 சதவீதமாக உயர்ந்துள்ளபோதிலும், முழுமையான சமூகநீதி இன்னும் ஏற்படவில்லை. கடந்த நூற்றாண்டில் சமூகநீதிக்காகப் பாடுபட்ட பனகல் அரசர், ப.சுப்பராயன், கும்பகோணம் முத்தையா முதலியார், ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர் உள்ளிட்டோரையும், சமூகநீதிக்காகப் போராடிய அனைவரையும் போற்ற வேண்டும்.















