Home செய்திகள் உலக செய்திகள் சியாட்டில் தீபாவளி விழாவில் இனவெறி கோஷம்

சியாட்டில் தீபாவளி விழாவில் இனவெறி கோஷம்

சியாட்டில், நவ. 9-
அமெரிக்காவில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில், இனவெறியைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் சிலர் புகுந்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள சியாட்டில் நகரில், இந்திய வம்சாவளியினர் நேற்று முன்தினம் (நவ. 7) தீபாவளி திருநாளைக் கொண்டாடுவதற்காக ஒன்று கூடியிருந்தனர். அப்போது அங்கு வந்த ஜேக் லாங், தாமஸ் ஆலன் என அடையாளம் காணப்பட்ட இரு வலதுசாரி ஆர்வலர்கள், ஹிந்துக்களுக்கு எதிரான மற்றும் இனவெறியைத் தூண்டும் வகையிலான வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி திடீரென ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.அவர்கள் வைத்திருந்த பதாகைகளில், “பொட்டு வைத்தவர்களை நாடு கடத்துங்கள்”, “கிறிஸ்தவர்களுக்கு பதிலாக ஹிந்துக்கள் வருவதை நிறுத்துங்கள்” போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த வாசகங்களைக் கண்ட விழாவில் பங்கேற்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அவர்களுக்கும் பதாகைகளை ஏந்தி வந்த இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.சம்பவம் தொடர்பாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க எம்.பி. பிரமிளா ஜெயபால் கூறியதாவது: “இந்த வெறுக்கத்தக்க மற்றும் இனவெறி செயல் அருவருப்பானது. தீபாவளி ஒரு முக்கியமான பண்டிகை. நம் மக்கள் அச்சமின்றி அதைக் கொண்டாட வேண்டும்” என்றார். தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், ஹிந்துக்களுக்கு எதிரான வாசகங்களுடன் இருவர் போராட்டத்தில் ஈடுபட்டது அங்கு கூடியிருந்தவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.