Home மாவட்டங்கள் பெங்களூர் ராஜினாமா கடிதம் அளித்த காங்கிரஸ் எம்எல்ஏ

ராஜினாமா கடிதம் அளித்த காங்கிரஸ் எம்எல்ஏ

பெங்களூரு: நவ. 24-
கர்நாடக மாநிலம் பேளூர், சக்லேஷ்பூர் பகுதிகளில் கடந்த வாரம் காட்டு யானைகள் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர். இதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், மனிதர்கள் வசிக்கும் பகுதிகளில் சுற்றித்திரியும் யானைகளை வேறு இடங்களுக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தினர்.
இதையடுத்து, வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி உத்தரவின்பேரில், சம்பந்தப்பட்ட காட்டு யானைகளைப் பிடிக்கும் பணியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பணிக்காக 7 கும்கி யானைகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஹாசன் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சிவலிங்கே கவுடா, ஹாசன் மாவட்ட கிராமங்களில்
சுற்றித்திரியும் 56 யானைகளைப் பிடித்து, சிக்கமகளூருவில் உள்ள பத்ரா வனவிலங்கு சரணாலயத்துக்கு அனுப்ப வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிக்கமகளூருவில் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த உத்தரவுக்கு சிக்கமகளூரு மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நயனா மோட்டம்மா, ராஜே கவுடா, தம்மையா ஆகிய 3 பேரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து எம்எல்ஏ நயனா மோட்டம்மா கூறுகையில், “இந்த விவகாரம் தொடர்பாக வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டிக்கு விரிவான கடிதம் எழுதியுள்ளோம். எங்களது கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால், எங்களது பதவிகளை ராஜினாமா செய்வோம்” என்றார்.
இதைத்தொடர்ந்து, நேற்று மாலை நயனா மோட்டம்மா கர்நாடக சட்டப்பேரவைத் தலைவரைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
எனினும், அந்தக் கடிதத்தை பேரவைத் தலைவர் ஏற்கவில்லை எனத் தெரிகிறது.