
மதுரை,நவ.28-
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இன்று மாலை 5 மணியளவில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. கோயில் பட்டர்கள், நீதிபதிகள் இணைந்து தீபத்தை ஏற்றிவைத்தனர்.
மண் சட்டி, 30 கிலோ நெய், 50 மீட்டர் காடா துணி, 5 கிலோ கற்பூரம் ஆகியவற்றால் தீபம் ஏற்றி வைக்கபட்டது.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நவ.24-ம் தேதி கார்த்திகை தீபம் ஏற்றவி்ல்லை. இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென உத்தரவிட்டது.
மலை பாதுகாப்பு பணியில் இருந்து தமிழக போலீஸார் விலகிக் கொண்டு மத்திய ரிசர்வ் போலீஸிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து இன்று மாலை 5 மணியில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது. மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டபோது உச்ச நீதிமன்றம் நியமித்த நீதிபதிகள் குழுவினர், மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். கோயில் பட்டர்கள், நீதிபதிகள் இணைந்து தீபத்தை ஏற்றிவைத்தனர். மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதை, மலையடிவாரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பார்த்து பரவசமடைந்து, பக்தி கோஷங்கள் எழுப்பினர். அப்போது அரோகரா முழக்கம் விண்ணை பிளந்தது.இன்று நடைபெற்ற தீபமேற்றும் நிகழ்வில் அனுமதிக்கப்பட்டவர்களை தவிர பக்தர்கள், பொதுமக்கள் மலையேற அனுமதி வழங்கப்படவில்லை.
இதுகுறித்து, ‘பொது மக்களின் பாதுகாப்பு, மலைப் பகுதியின் புனிதம் மற்றும் சட்டம் – ஒழுங்கைப் பராமரிப்பதைக் கருத்தில் கொண்டு அனுமதிக்கப்பட்ட குழுவினரை தவிர இதர பொது மக்கள் மற்றும் பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதிக்கப்படவில்லை” என்று மதுரை மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்தது. திருப்பரங்குன்றம் மலை முழுவதும் மத்திய அரசின்
சிஆர்பிஎப் பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. எந்தவித அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாத வரை பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது ட்ரோன் கேமராக்கள் மூலம் அங்குலம் அங்குலமாக கண்காணிக்கப்பட்டது
















