Home மாவட்டங்கள் சென்னை ஆர்டிஐ கேள்விகளுக்கு விஜய் அரசு பதில் இல்லை?

ஆர்டிஐ கேள்விகளுக்கு விஜய் அரசு பதில் இல்லை?

சென்னை, நவ. 8-
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையிலான தமிழக அரசு மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதல்வர் விஜய், அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் தொடர்பான கேள்விகளுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் அளிக்கப்படுவதில்லை என கூறப்படுகிறது. சாமானிய மக்களும் அரசின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டதே தகவல் அறியும் உரிமைச் சட்டம். இதன்படி, அரசு மற்றும் பொதுத்துறை தொடர்பான தகவல்களைப் பெற இந்தியக் குடிமக்கள் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.10. ஒரு துறை தொடர்பாக அளிக்கப்படும் மனுவுக்கு, சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரியும், பொது தகவல் அலுவலரும் 30 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். பதில் மறுக்கப்பட்டால் மாநிலத் தகவல் ஆணையத்தை அணுகலாம். பொது தகவல் அலுவலர் உரிய பதில் அளிக்காவிட்டால், அவருக்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். இந்நிலையில், தவெக ஆட்சியில் ஆர்டிஐ சட்டத்தின் கீழ் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.