
சென்னை, நவ. 9-
தீபாவளியை முன்னிட்டு சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாலைகள், தெருக்கள் மற்றும் மழைநீர் வடிகால்களில் தேங்கியுள்ள பட்டாசுக் கழிவுகளை அகற்றும் பணியை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக 600 தூய்மைப் பணியாளர்கள், 350 வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பட்டாசுக் கழிவுகளைத் தனியாகச் சேகரிப்பதற்காக 50 கிலோ கொள்ளளவு கொண்ட 30 ஆயிரம் பிரத்யேகப் பைகள் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இரவு நேரங்களிலும் இயந்திரங்கள் மூலமாகவும், பணியாளர்கள் மூலமாகவும் சிறப்புத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு தீபாவளியின்போது மூன்று நாட்களில் 200 டன்னுக்கும் அதிகமான பட்டாசுக் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. நடப்பாண்டில் சுமார் 600 டன் பட்டாசுக் கழிவுகள் சேரும் என மாநகராட்சி எதிர்பார்க்கிறது. சென்னையில் கடந்த 5 ஆண்டுகளில் 1,100 டன்னுக்கும் அதிகமான பட்டாசுக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. 2021-ல் 138 டன்னாக இருந்த கழிவுகள், 2022-ல் 211 டன்னாகவும், 2023-ல் 210 டன்னாகவும் பதிவாகின. 2024-ம் ஆண்டு அதிகபட்சமாக 319 டன் கழிவுகள் சேகரிக்கப்பட்ட நிலையில், 2025-ம் ஆண்டு 225 டன்னாகக் குறைந்தது. பட்டாசுக் கழிவுகளில் உள்ள வெடிமருந்து எச்சங்கள் மற்றும் ரசாயனப் பொருட்கள் உள்ளிட்டவை மற்ற குப்பைகளுடன் கலப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், பட்டாசுக் கழிவுகளைத் தனியாகச் சேகரித்து கும்மிடிப்பூண்டியில் உள்ள அபாயகரமான கழிவுகள் மேலாண்மை மையத்துக்கு அனுப்ப மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
















