Home மாவட்டங்கள் சென்னை இடைத்தேர்தலில் இரு தொகுதிகளிலும் அதிமுக சறுக்கிய பின்னணி

இடைத்தேர்தலில் இரு தொகுதிகளிலும் அதிமுக சறுக்கிய பின்னணி

சென்னை: அக். 10-
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில், அதிமுகவிலிருந்து விலகி தவெக வேட்பாளராகப் போட்டியிட்ட சத்யபாமாவை அக்கட்சியினர் ஏற்கமாட்டார்கள் என்பதால், அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என பொதுச்செயலாளர் பழனிசாமி நம்பியிருந்தார். ஆனால், அந்தத் தொகுதியில் தவெக வெற்றி பெற்றது.
அதேபோல், மதுராந்தகம் தொகுதியிலும் அதிமுகவிலிருந்து விலகி தவெக வேட்பாளராகப் போட்டியிட்ட மரகதத்தின் நடவடிக்கையை அதிமுகவினர் மன்னிக்கமாட்டார்கள் என்பதால், இங்கும் வெற்றி உறுதி என பழனிசாமி கருதியிருந்தார். ஆனால், மதுராந்தகம் தொகுதியிலும் அதிமுக தோல்வியடைந்தது.
கடந்த தேர்தலில் இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றிருந்த நிலையில், தற்போது அக்கட்சி 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டது. இதற்கான காரணங்கள் குறித்து அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:இரு தொகுதிகளிலும் அதிமுகவுக்கு கிராமப்புறங்களில் மட்டுமே கணிசமான வாக்குகள் கிடைத்தன. கடந்த தேர்தலில் பாமக, தமாக ஆகிய கட்சிகள் அதிமுக கூட்டணியில் இருந்தன. மேலும், கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டனர். ஆனால், இடைத்தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, அந்தத் தொகுதிகளில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம், சத்யபாமா ஆகியோர் தவெகவில் இணைந்தனர். இதைத் தொடர்ந்து அதிமுகவைச் சேர்ந்த பலரும் தவெகவில் சேர்ந்துவிட்டனர்.மதுராந்தகம் தனித் தொகுதியாக இருந்தாலும், அப்பகுதியில் வன்னியர்கள் வலுவாக உள்ளனர். இந்த நிலையில், பாமக மறைமுகமாக தவெகவுக்கு ஆதரவளித்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர். தாராபுரம் தொகுதியில் கொங்கு சமூகத்தினர் அதிகமாக உள்ளனர். அதிமுகவில் அந்த சமூகத்தின் முகமாக விளங்கும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் பிரசாரத்துக்கு வராததால், அச்சமூகத்தினரின் வாக்குகளும் அதிமுகவுக்குக் கிடைக்கவில்லை. இந்த காரணங்களாலேயே இரு தொகுதிகளிலும் அதிமுக 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.