Home செய்திகள் உலக செய்திகள் எப்.பி.ஐ. தேடப்படும் பட்டியலில் கோல்டி பிரார்

எப்.பி.ஐ. தேடப்படும் பட்டியலில் கோல்டி பிரார்

வாஷிங்டன், செப். 29-
அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., மிகவும் தேடப்படும் ‘டாப் 10’ குற்றவாளிகள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த கோல்டி பிரார் என்றழைக்கப்படும் சத்தீந்திர்ஜீத் சிங்கை சேர்த்துள்ளது. அவரைப் பற்றிய தகவல்களைத் தெரிவிப்போருக்கு ரூ.9.6 கோடி சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சத்தீந்திர்ஜீத் சிங், இந்தியாவில் செயல்பட்டு வரும் லாரன்ஸ் பிஷ்னோய் குற்றக் கும்பலின் வட அமெரிக்கத் தலைவராகச் செயல்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்மீது கொலை, மிரட்டிப் பணம் பறித்தல், போதைப்பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. சீக்கிய ஆர்வலர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலையிலும் கோல்டி பிராருக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. எனினும், இந்தத் தொடர்பு குறித்த தகவல் குற்றச்சாட்டாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. கோல்டி பிரார் என்ற சத்தீந்திர்ஜீத் சிங் குறித்து நம்பகமான தகவல்களை அளிப்போருக்கு ரூ.9.6 கோடி சன்மானம் வழங்கப்படும் என எப்.பி.ஐ. தெரிவித்துள்ளது. அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் அவர் ஆயுதங்களுடன் பதுங்கியிருக்கலாம் என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. ஆயுதங்களுடன் பதுங்கியிருக்கக்கூடும் என்பதால், கோல்டி பிரார் மிகவும் ஆபத்தானவர் என்றும் எப்.பி.ஐ. எச்சரிக்கை விடுத்துள்ளது. அவரைப் பற்றிய தகவல் கிடைத்தால், அது தொடர்பாக அமெரிக்க புலனாய்வு அமைப்புக்குத் தெரிவிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.