Home செய்திகள் உலக செய்திகள் புலம்பெயர்ந்தோரை குடும்பத்தினராக வரவேற்க வேண்டும்: போப்

புலம்பெயர்ந்தோரை குடும்பத்தினராக வரவேற்க வேண்டும்: போப்

லண்டன், செப். 29-
ஐரோப்பாவுக்கு புலம்பெயர்ந்து வருபவர்களை குடும்பத்தினராகக் கருதி வரவேற்கும் மனப்பான்மை அதிகரிக்க வேண்டும் என்று போப் லியோ 14-ம் தெரிவித்துள்ளார். நான்கு நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள போப் லியோ, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோனுடன் மெட்ஸ் நகருக்குப் பயணம் மேற்கொண்டார். அப்போது புலம்பெயர்ந்தோர் தொடர்பாக அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார். “போர் மற்றும் பல்வேறு துன்புறுத்தல்கள் காரணமாக ஆண்களும் பெண்களும் அதிக அளவில் அடைக்கலம் தேடிச் செல்வதை நாம் காண்கிறோம். அண்மையில் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் கேனரி தீவுகளில் அதிக அளவில் புலம்பெயர்ந்தனர். அவ்வாறு வரும் மக்களை நாம் வரவேற்க வேண்டும். அவர்களை நமது சொந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகக் கருத வேண்டும். தங்களது திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பை அவர்களுக்கு வழங்க வேண்டும். அதற்கேற்ப அவர்கள் வாழ்வதற்கும் அனுமதிக்க வேண்டும்” என்று போப் லியோ கூறினார். ஆட்கடத்தலைத் தடுப்பதற்கான முயற்சிகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கையையும் அவர் வரவேற்றார். அதே நேரத்தில், புலம்பெயர்ந்து வரும் மக்களுக்கு அந்த நாட்டின் வரலாற்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். பல்வேறு குழுக்கள் மற்றும் பிரிவினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்திய போப், ஆயுதக் கொள்முதல் அல்லது ஆயுதப் பயன்பாட்டுக்கான செலவுகளை அதிகரிக்க வேண்டும் என்ற உலகத் தலைவர்களின் அழைப்பையும் விமர்சித்தார். பிரான்சில் நிலவும் கருக்கலைப்பு உரிமை குறித்தும் அவர் விமர்சனம் தெரிவித்தார்.