Home மாவட்டங்கள் சென்னை ஏழு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ஏழு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: நவ.9
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில், சென்னை பாரிமுனை மற்றும் மதுரவாயல் பகுதிகளில் அதிகபட்சமாக தலா 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம், தண்டையார்பேட்டை மற்றும் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் தலா 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டலச் சுழற்சி நிலவுகிறது. மேலும், தமிழகத்தின் தென் மாவட்டங்கள் வழியாக மத்திய கிழக்கு அரபிக்கடல் வரை வளிமண்டலத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியும் காணப்படுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.நீலகிரி, கோவை, திருப்பூர், விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தேனி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சில இடங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யலாம்.
தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.